ரணிலை விரட்டியடித்து பதவியை பறித்தெடுத்தமைக்கான காரணம் என்ன? மஹிந்த தெரிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளார்.

நாடு நெருக்கடியை சந்தித்துள்ள தருணத்தில், பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற தயார் நிலையில் இருந்தமை காரணமாகவே பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் இன்று கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்டார். இதன்போது கலந்துரையாடும் போது இந்த தகவல்களை வெளியிட்டார்.

நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அவர்களின் ஆரோக்கியமான இருப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக தெரிவித்தார்.

இக்கட்டான நிலையில் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாவிட்டால் ஜனாதிபதி தம்மை பிரதமராக நியமித்திருக்க மாட்டார். நாடாளுமன்றம் மீண்டும் கூடும்பொழுது, நாடாளுமன்றத்தில் தமக்கு 120 இற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் மஹிந்த உறுதிபட தெரிவித்தார்.

தாம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தை விட்டு உடனடியாக வெளியேறிய விடயத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதாரணமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு அமைவாகவே இடம்பெற்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.