நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலமே நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும்! கலாநிதி ஜெஹான் பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலைமையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலமே நாட்டுக்கு நன்மையான தீர்வை காண முடியும் என சிவில் செயற்பட்டாளரும் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்புடன் முன்னோக்கி செல்ல வேண்டிய பயணம். இந்த இடத்தில் இரகசியமான சதித்திட்டத்தின் தன்மையை காணமுடிகிறது. இது சரியான நடவடிக்கை என ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் எவரும் இதனை அறிந்திருக்கவில்லை.

இப்படி ஒன்று நடக்க போகின்றது என்பதை நாங்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தற்போது இந்த பிரச்சினையை தீர்க்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

நாடாளுமன்றம் என்பது மக்களின் பிரதிநிதி, எப்படி முன்னோக்கி செல்வது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதில் சட்டப் பிரச்சினைகளும் உள்ளன. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதமரை பதவி நீக்குவது தொடர்பான விதிமுறைகள் உள்ளன.

அந்த விதிமுறைகள் இந்த இடத்தில் கையாளப்படவில்லை. இதனால் சட்டரீதியான பிரச்சினைகளும் உள்ளன. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமாயின் உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

நிச்சயமற்ற நிலைமையில், நவம்பர் 16ஆம் திகதி வரை காத்திருக்க முடியாது. ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். இதன் மூலமே நாட்டுக்கு நன்மையான தீர்வு கிடைக்கும் என ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.