நாடாளுமன்றத்தில் முன்னரை விட பலமாக உள்ளோம்! ஐ.தே.க தெரிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்ததனை விடவும் மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் சட்டவிரோதமாக அமைச்சர்களை நியமிக்கட்டும், பதவி வகிக்கட்டும், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளட்டும்.

எனினும் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டவர்கள் வெகு சீக்கிரத்தில் இந்த அனைத்தையும் விட்டு வீடு செல்ல நேரிடும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத் தரப்பினர் சட்டத்தை அமுல்படுத்துவோர் அனைவருக்கும் நாம் ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம்.

சட்டத்தை எவரும் கையில் எடுத்துச் செயற்பட வேண்டாம்.

நாம் வெகு விரைவில் மிகவும் வலுவான ஓர் அரசாங்கத்தை உருவாக்வோம்.

எவரினாலும் காலில் பிடித்து இழுக்க முடியாத வகையிலான வலுவான அரசாங்கம் உருவாக்கப்படும்.

வலுவான அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பயணத்தை எவரேனும் தடுக்க முயற்சித்தால் அதற்கு நட்டஈடு செலுத்த ஆயத்தமாக இருங்கள் என அவர்களை நாம் எச்சரிக்கின்றோம்.

எதிர்வரும் நாட்களில் சுதந்திரக் கட்சி மட்டுமன்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எமக்கு ஆதரவளிக்க உள்ளனர்.

எந்த ஊடகம் எவ்வாறான பொய்களைச் சொன்னாலும் விரைவில் இந்த நிலை மாறும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சொற்ப நாட்களிலேயே ஊடகங்கள் மீது கடுமையான அழுத்தங்களை இந்தத் தரப்பினர் பிரயோகித்து வருகின்றனர்.

ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.