பிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு!!

Report Print Murali Murali in அரசியல்
2729Shares

பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க இன்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சென்றிருந்த அர்ஜூன ரணதுங்கவை மகிந்த ராஜபக்ச ஆதரவு தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு தாக்க முற்பட்டனர்.

அப்போது, அவரது மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர், அவர்களின் சீருடை மற்றும் தலைக்கவசம் அணிவித்தே, அர்ஜூன ரணதுங்கவை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.

இந்த நிலையில், அர்ஜூன ரணதுங்கவை கைது செய்யக் கோரி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பிரதமராகப் பொறுப்பேற்ற மகிந்த ராஜபக்ச, தெமட்டகொட துப்பாக்கிச சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்தே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அர்ஜூன ரணதுங்கவை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.