வடக்கு மாகாணம் குறித்து ஜனாதிபதி கூறியுள்ள தகவல்!

Report Print Murali Murali in அரசியல்

வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல் வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

எமது நாடு வடக்கிலிருந்து கிழக்கிற்கும் மேற்கிலிருந்து தெற்கிற்கும் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பயிர்செய்யக்கூடிய ஒரு புண்ணிய பூமியாகும். இந்த புண்ணிய பூமியின் மதிப்பினை உணர்ந்து அதற்கு உகந்தவாறு பொருளாதார திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும்.

பொருத்தமான உணவுக் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த புண்ணிய பூமிக்கு பொருத்தமானவாறு பொருளாதார கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தயாரிக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் பழமையான தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞான ரீதியான அறிவு, விவசாயம் பற்றிய அனுபவ முதிர்ச்சி ஆகியவற்றினால் பரிபூரணமடைந்த தேசத்திலேயே தற்போது நாம் வாழ்கின்றோம்.

இந்த புண்ணிய பூமியை விவசாயப் பொருளாதாரத்தின் ஊடாக பலப்படுத்தும் அதேவேளை ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகிய அனைத்தையும் நாம் பலப்படுத்த வேண்டும்.

வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, தெற்கு என்பதல்ல எமது பிரச்சினை. நாடு என்ற வகையில் உள்ள பிரச்சினைகளில் மக்களின் பிரச்சினை என்ன என்பதும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதுமேயாகும்.

அனைத்து மனிதர்கள் மீதும் ஒன்றுபோல் அன்பு பாராட்டுவதன் மூலமும் ஒருவரையொருவர் மதித்து ஏற்றுக்கொள்வதன் மூலமும் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசாங்க அதிகாரிகள், அனைத்து சமய தலைவர்கள் நாட்டின் அனைத்து பிரஜைகள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.