உலக வரலாற்றில் பதிவான மைத்திரியின் பெயர்?

Report Print Kamel Kamel in அரசியல்

உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையில் தற்பொழுது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரும், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்காக பாடுபட்டவருமான பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மறைந்த சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் சக்திகளின் அர்ப்பணிப்பின் காரணமாகவே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி பதவி கிடைத்தது.

அரசியல் அமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் மற்றும் விழுமியங்களுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி கடந்த 26ம் திகதி இரவு நடந்து கொண்டார்.

ஒரே வார்த்தையில் இதனைக் கூற வேண்டுமாயின் இது ஓர் சூழ்ச்சித் திட்டமாகும். இந்த பயங்கர சூழ்ச்சித் திட்டத்தின் ஆபத்தான நிலைமை இந்த சூழ்ச்சியை முன்னெடுத்தவரே நாட்டின் அரச தலைவர் என்பதுவாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நாகரீகமற்ற நிலைமையையே வெளிப்படுத்தி நிற்கின்றார்.

சட்டவிரோதமாக பிரதமரை நியமித்தல் மற்றும் நாடாளுமன்றை ஒத்தி வைத்தமை ஆகிய இரண்டு பிழைகளை மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடனடியாக நாடாளுமன்றை கூட்டி நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக வரலாற்றில் இலங்கை ஜனாதிபதியின் பெயர் இந்த அதிரடி செயற்பாட்டால் பதிவாகியுள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலும் அரச தலைவர் தனது அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் பேராசிரியர் சரத் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.