ரணில் அழுதபடியே அலரிமாளிகைக்குள் முடக்கம்! மகிந்த மறைமுகமாக அழுத்தம்

Report Print Rakesh in அரசியல்

“ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர், சிரித்தபடியே அலரிமாளிகையை விட்டு வெளியேறினேன்.

ஆனால், இவரோ (ரணில்) அதற்குள்ளேயே அழுதபடி முடங்கியுள்ளார். இதைப் பார்த்து நாட்டு மக்கள் சிரிக்கின்றனர்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, தான்தான் இன்னும் சட்டரீதியான பிரதமர் என கூறிவரும் ரணில் விக்கிரமசிங்கவை தாக்கிப் பேசினார்.

“தேர்தலைப் பல வருடங்களாக ஒத்திவைத்து வந்தவர்கள், நாடாளுமன்றம் ஒருமாதம் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர். இது எந்த வகையில் நியாயம் ஆகும்? நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது பெரிய விடயமல்ல. அதை நானும் செய்துள்ளேன்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். முதலில் தெளிவானதொரு பொருளாதாரக் கொள்கை இருக்கவேண்டும்.

அதன் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். பூவிலிருந்து தேனீ தேன் எடுப்பதுபோலவே பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தபின்னர் மறுநாள் அதிகாலையே சிரித்தபடி அலரிமாளிகையை விட்டு நான் வெளியேறினேன்.

ஆனால், இவர் (ரணில்) அழுதபடியே விட்டுச் செல்ல மனம் இல்லாமல் அலரி மாளிகைக்குள்ளேயே முடங்கியிருக்கின்றார்” என்றும் மகிந்த கூறினார்.