மகிந்தவை பிரதமராக கொண்டு வந்த மைத்திரிக்கு எதிராக கையெழுத்து வேட்டை ஆரம்பம்

Report Print Rusath in அரசியல்

ரணிலை வேண்டுமென்றே பிரதமர் பதவியிலிருந்து அகற்றி புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை கண்டிப்பதாக இலங்கைப் பிரஜைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குறித்த அமைப்பினால் நேற்று முதல் கையெழுத்து வேட்டை ஆராம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாட்டைக் கண்டித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் கோரியே கையெழுத்து வேட்டையில் இறங்கியிருப்பதாக அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான விஜயலெட்சுமி தனராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த கையெழுத்து வேட்டை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தால் பாதுகாக்கப்பட்ட குறிப்பிட்ட விடயங்களை மீறும் வகையில் ஜனாதிபதி சிறிசேனவின் செயற்பாடு அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாடு மக்கள் ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் வெளிப்படையான மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் இந்தத் தீர்மானமானது மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதை பலமாகப் பறைசாற்றுகிறது.

இது அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட முறைகளின் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், பலப்படுத்துவதற்குமே இவ்வாறு தொடர்ச்சியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ரணில் பிரதமராக இருந்த அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட பெரும்பாலான உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறான அரசியல் கட்டமைப்பொன்றைக் கொண்டிருந்தது.

இருந்தபோதும், கடந்த மூன்று வருடங்களில் முக்கிய சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

இவற்றில் இலங்கையில் ஜனநாயகம் விரிவுபடுத்தப்பட்டமை, பல்வேறு மட்டங்களில் பங்களிப்புச் செலுத்த முடிந்தமை, மாற்றுக் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடிந்தமை போன்றவற்றைக் குறிப்பிடமுடியும்.

ராஜபக்ச அவருடன் இணைந்தவர்களும் ஜனநாயக ரீதியான ஆணையின்றி அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சியானது, அரசியலமைப்பு மற்றும் சட்டம் மதிக்கப்படாத, அரசாங்கத்தின் கருத்துக்களுடன் முரண்பட்ட ஊடகங்கள், மதங்கள் மற்றும் சிறுபான்மை இனங்கள் தாக்கப்பட்ட, நல்லிணக்க மற்றும் சமாதானம் அற்ற சூழலுக்கு நாடு மீண்டும் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நீடித்த யுத்தம் மற்றும் அதன் பின்னரான சூழலை எதிர்கொண்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், நாம் கோரிய சிறந்த ஆட்சியை ஒக்டோபர் 26ஆம் திகதிவரை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் அண்மைய முடிவானது சட்டரீதியற்ற, ஜனநாயகத்துக்கு முரணானது என்பது மாத்திரமன்றி இது அரசியலமைப்பு ரீதியான பிரச்சினையையும் உருவாக்கியுள்ளது.

இது சட்டபூர்வமான அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பாரிய குழப்பத்துக்குத் தள்ளியள்ளது.

இது இலங்கை பிரஜைகளின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை அச்சத்துக்குள் தள்ளியுள்ளது.

குறிப்பாக உரிமைகள் மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பவர்கள், வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் என்பவற்றை அச்சத்துக்குள் தள்ளியுள்ளது.

சகலரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே, ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கூட்டி தற்பொழுது தோன்றியுள்ள குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி தீர்வொன்றைக் காண்பதற்கு வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாடாளுமன்ற செயற்பாட்டினால் எவ்வாறான முடிவு எட்டப்பட்டாலும் அதுபற்றிக் கவலைப்படாது, மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழி மற்றும் அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்பவற்றை அரசாங்கம் நிலைநாட்ட வேண்டும்.

இதேவேளை, சட்டத்துக்கு கீழ்ப்பட்டும் இலங்கை மக்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலும் நடந்துகொள்ளுமாறு, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பவற்றிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.