மஹிந்தவை விரட்டுவதில் மேற்குலகம் தீவிரம்! பலம் வாய்ந்த நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகருடன் முக்கிய பேச்சு

Report Print Rakesh in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் முன்னர் பலம் வாய்ந்த மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் மார்கியு, பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்டவர்கள் சபாநாயக​ரைச் சந்தித்துள்ளனர்.

குறித்த தூதுவர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடினர்.

அரசமைப்புக்கு முரணாக மஹிந்தவை பிரதமராக நியமித்தமையாலும் நாடாளுமன்றத்தை உடன் கூட்டாமல் முடக்கி வைத்திருப்பதாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து தமது நாடுகளின் கடும் அதிருப்தியை சபாநாயகரிடம் அவர்கள் வெளியிட்டனர்.

அரசியல் குழப்ப நிலையால் இலங்கை பொருளாதாரம் உள்ளிட்ட பல பாதிப்புக்களை சர்வதேச ரீதியில் எதிர்கொள்ளும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

இதன்போது, இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் வெளிநாடுகள் அவசரப்பட்டு முன்னெடுக்கக்கூடாது என்று அவர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் அரசமைப்புக்கு இணங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாடாளுமன்றத்தை உடன் கூட்டி அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண வழிவிடுமாறும் ஜனாதிபதியிடம் தான் நேரில் எடுத்துரைக்கவுள்ளதாகவும் தன்னைச் சந்தித்த வெளிநாடுகளின் தூதுவர்களிடம் சபாநாயகர் தெரிவித்தார்.