மகிந்தவை ஆதரிக்க இதுவே காரணம்! வடிவேல் சுரேஸ் கூறிய காரணம்

Report Print Murali Murali in அரசியல்

“அரசுகள் வரலாம், போகலாம். அதுவல்ல நமக்கு முக்கியம். பெருந்தோட்ட சமூகத்தின் நல்எதிர்காலமும் சம்பள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வைப்பதும் தான் எமக்கு இப்போது முக்கியம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

பெருந்தோட்ட கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் வடிவேல் சுரேஷ் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசில் அங்கம் வகிக்க எடுத்த முடிவு பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் இன்றைய சூழலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வாங்கித்தர வேண்டிய அவசியம் உள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமரிடம் சம்பள விடயமாகப் பேசியிருக்கிறார்.

தொழிற்சங்கத் தரப்பினர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கூட்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்படுவதில் காணப்படும் பிரச்சினைகள் அடுத்துவரும் தினங்களில் தீர்க்கப்பட்டுவிடும். எமது கோரிக்கை வெற்றிபெறும்.

நான் ஐ.தே.க. உயர் மட்டத்திலும் முன்னாள் பிரதமரிடமும் இது பற்றி விரிவாக பேசியிருக்கிறேன். கெஞ்சிக் கேட்டேன், ரணில் விக்கிரமசிங்க சம்பள விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை.

சம்பள விவகாரத்தை மேலும் இழுத்தடிக்க முடியாது என்றும், குறுகிய காலத்துக்குள் ஒரு முடிவைக் காண வேண்டியிருப்பதாலும் புதிய அரசு அதற்குத் தளமாக இருப்பதாலும் நான் அரசுடன் இணைய முன்வந்தேன்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்கள் முன்பாக கூட்டு உடன்படிக்கை தொடர்பாக தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தால், அது எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்றும் அது முதலாளிமார் தரப்புக்கு அழுத்தம் தந்திருக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.