மைத்திரியின் அதிரடி நடவடிக்கை குறித்து கனேடிய கன்சவேட்டிவ் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்சவேட்டிவ் கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தற்போது அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இலங்கை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு புறம்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார்.

ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சிக்காலம் குறிப்பாக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறது.

சீனாவுடன் நெருக்கமான ஒப்பந்தங்களை அவர் கொண்டுள்ளவர் என்பதுவும் அறியப்பட்ட விடயம்.

"இலங்கையில் உருவாகிவரும் நிலைமைகளை அதீத கரிசனையுடன் கன்சவேட்டிவ் கட்சி கவனத்தில் கொள்கிறது," என கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் பிரதி வெளிவிவகார அமைச்சருமான கார்னட் ஜீனியஸ் தெரிவித்தார்.

"ஜனநாயகத்தை முன்னேற்றுவது மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளின் காவலனாக இருப்பது உள்ளடங்கிய முதன்மையான வெளிவிவகாரக் கொள்ளை ஒன்றை கனடா முன்னெடுக்க வேண்டும்.

கணிசமான கனேடிய வெளிநாட்டு உதவிகளை பெறும் நாடு என்ற வகையில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அதியுயர் நிலையில் பேணப்பட்டாக வேண்டும்.

நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் இலங்கை தேக்கநிலையை அடைந்துள்ளதுடன் பின்னோக்கியும் நகருகிறது.

இருந்தும் கனேடிய அரசிடம் இருந்து நாம் எவ்வித நடவடிக்கையையும் காணவில்லை. இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் மட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளும் இன்று ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன," எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சவின் முன்னாள் அரசாங்கம் போர் குற்றங்களையும் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்ளையும் ஏன் இனப்படுகொலையிலும் கூட ஈடுபட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

குறிப்பாக ஜனநாயக விரோத வழியில் ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளமையின் விளைவுகள் குறித்து கனேடியத் தமிழர்கள் அதீத கரிசனை கொள்வது சரியானதே.

உள்நாட்டுப் போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் நம்பிக்கை தரும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக தேவைப்படுகிறது.

எனினும் கடந்த காலத்திற்கான தீர்வை எட்டாமை, தற்போதும், எதிர்காலத்திலும் உரிமை மீறல்கள் அதிகரிப்தற்கான ஆபத்தை அண்மைய நிகழ்வுகள் விளக்குகின்றன.

போர் குற்றங்களுடன் சம்மந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளை கனடாவிற்குள் அனுபதிப்பது தொடர்பாக கன்சர்வேட்டிவ் கட்சி முன்னரும் எமது கரிசனைகளை வெளியிட்ட அதேவேளை, மக்னிஸ்கி சட்டத்தை பயன்படுத்தி மோசமான மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்ட இலங்கையரை, தடுப்பதில் லிபரல் அரசு தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம் என்றும் கார்னட் ஜீனியஸ் குறிப்பிட்டுள்ளார்.