ஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் அரசியல் யாப்பிற்கு முரணாக உள்ளன

Report Print Akkash in அரசியல்

ஒருவர் பிரதமராக இருக்கும் போது இன்னுமொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளமை சட்டவிரோதமானது என இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி - காவத்தையில் நேற்று மாலை 3 மணியளவில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிங்கள மொழியில் இருக்கும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளின் படியே தான் நடந்து கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிறார்.

அப்படி சிங்கள மொழியில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

அதனால் சிங்கள மொழியில் இருப்பதையே ஏற்க வேண்டும் என்ற தேவை ஏற்படாது. உறுப்புரை 48(1) பிரதமரை பதவி நீக்குவது பற்றி கூறவில்லை.

மேற்போன்ற விடயங்களின் அடிப்படையில் ரணிலை பதவி நீக்கம் செய்ததும், மஹிந்தவை பிரதமராக நியமித்ததும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளை மீறிய செயல்களாகும்.

அத்துடன் 30ஆம் திகதி கூட இருந்த நாடாளுமன்ற அமர்வை நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்தமை தகுந்த சூழ்நிலையில் செய்யப்படவில்லை. இதுவும் யாப்பிற்கும் முரணாகும்.

எனவே, ஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் அரசியல் யாப்பிற்கு முரணாவதுடன் ஜனநாயகத்திற்கு விரோதமான, சட்டவாட்சிக்கு முரணாவதுடன் மக்களுக்கு விரோதமானதாகும்.

இச்செயல்களை நாம் கண்டிப்பதுடன் அவை செல்லுபடியற்றவை என்பதையும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers