நாடாளுமன்றம் 5ஆம் திகதியா 7ஆம் திகதியா? 16ஆம் திகதியா? சபாநாயகரின் திடீர் அறிவிப்பு

Report Print Shalini in அரசியல்

நாடாளுமன்றம் மீண்டும் 7ஆம் திகதியே கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாடாளுமன்றம் நவம்பர் 7ம் திகதி மீண்டும் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பிரதமர் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமர் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்த போதும் ஜனாதிபதி 16ஆம் திகதி வரை நாடாளுமன்றை ஒத்திவைத்தார்.

இதனால் நிலைமை மோசமடையவே 5ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் 7ஆம் திகதியே கூடும் என சபாநாயகர் தெரிவித்ததாக ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 16ஆம் திகதியே கூட்டப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.