கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மஹிந்த அணியிடம்! கருணா வெளியிட்ட பரபரப்பு செய்தி

Report Print Shalini in அரசியல்

இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” எனக் கூறி ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மஹிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 118 பேர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.

மேலும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 7 உறுப்பினர்களை தம்வசம் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும் தமது ஆதரவை யாருக்கும் வழங்காமல் இதுவரை நடுநிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மையும், மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க உள்ளதாக கருணா கூறியுள்ளமை அனைவர் மத்தியிலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers