ரணிலை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

ரணில் விக்ரமசிங்க உட்பட சிலர் அரசுக்கு சொந்தமான அலரி மாளிகையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால், அவர்களை கைதுசெய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி, சிங்கள ராவய, பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகள் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளன.

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர், பொதுபல சேனா அமைப்பின் அமைப்பாளர் தாபனே சுமவங்ச உள்ளிட்டோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பார் எனில் அது அரச சொத்தை தவறாக பயன்படுத்திய குற்றமாகும் எனவும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு தம்மை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் மாகல்கந்தே சுதத்த தேரர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சட்டரீதியாக நடந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்குரிய ஆசனத் ஒதுக்கவும் சிறப்புரிமைகளை வழங்கவும் சபாநாயகர் இணங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருக்க உரிமையில்லை.

இதனால், அலரி மாளிகையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைவரையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாகல்கந்தேக சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers