மைத்திரியின் சட்டவிரோதமான செயலால்தான்....! சுமந்திரன் சீற்றம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவிரோதமான செயலால்தான் நாட்டில் இன்று மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் குழு அறையில் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்பகல் விசேட கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்த கட்சிகளை சபாநாயகர் இன்று அழைத்திருந்தார்.

அதற்கமைய இன்று நடைபெற்ற கூட்டத்தில், அரசமைப்பு சட்டத்துக்கு மாறாக ஜனாதிபதி கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர் வகித்த பதவியிலிருந்து நீக்கியதும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததும் சட்டவிரோதமானது என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்ட விடாமல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமர்வை ஒத்திவைத்துள்ளமையும் சட்டவிரோதமானது என்றும், ஆகவே, பெரும்பான்மையான எம்.பிக்களின் கோரிக்கைகளுக்கமைய உடனடியாக நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

இந்தக் கூட்டத்தில் ரணிலுக்கா? மஹிந்தவுக்கா? ஆதரவு என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் செயல் சட்டவிரோதமானது.

அதை நாடாளுமன்றத்தால் மட்டும்தான் தீர்க்க முடியும். ஆகவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய நேரத்தில் உரிய தீர்மானத்தை எடுப்போம்.

ஜனாதிபதியின் சட்டவிரோதமான செயலினால்தான் நாட்டில் இன்று மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு தீர்க்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். இதுவே எங்கள் நிலைப்பாடு” – என்றார்.

Latest Offers