முடிவில்லாமல் முடிந்த த.தே.கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு!

Report Print Nivetha in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றமான சூழலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய கூட்டத்திலும் தீர்மானிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலைமைகளில் எந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டது.

எனினும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மீண்டும் கூடி ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய நேரத்தில் உரிய தீர்மானத்தை எடுப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

அது மட்டும் இன்றி, ஜனாதிபதியின் சட்டவிரோதமான செயலினால்தான் நாட்டில் இன்று மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதற்றமான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.