இரட்டை பிரஜா உரிமைகொண்ட ஈபிடிபி உறுப்பினரின் அங்கத்துவம் பறிபோனது

Report Print Sumi in அரசியல்

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்வான உறுப்பினர் வேலும்மயிலும் - குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டுள்ளமையினால் மாநகர சபையில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த வேலும்மயிலும் - குகேந்திரன் (ஜெகன்) இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது.

குறித்த காரணத்தினால் குகேந்திரனின் மாநகர சபை உறுப்புறுமை செல்லுபடியற்றது, என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டது.

இதன்போது வழக்காளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல், ஆகியோர் ஆஜராகினர்.

இருதரப்பு வாதமும் நிறைவு செய்த நிலையில் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்காளர் தரப்பு சட்டத்தரணிகள் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்க வேண்டும் எனக்கோரப்பட்ட நிலையில் எதிர் மனுதாரர் சார்பில் எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றின் அடிப்படையில் இடம்பெற்ற வழக்கினை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கின் எழுத்துமூல சமர்ப்பணத்தின் பின்பாக இன்று குறித்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது குறித்த மாநகர சபை உறுப்பினர் பிற நாடு ஒன்றிற்கும் விசுவாசமாக இருப்பது எண்பிக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்ட விதிக்கோவை 9இன் பிரகாரம் வேலும்மயிலும் - குகேந்திரன் மாநகர சபை உறுப்பினராக இருப்பதற்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையினை உறுதி செய்து குறித்த நபர் உறுப்பினராக தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு வழக்குச் செலவு முழுவதனையும் செலுத்துமாறும் உத்தரவிட்டது.

Latest Offers