விக்னேஸ்வரனால் கூட தோசையை புரட்டிப்போட முடியவில்லை! தமிழர்களை விமர்சிக்கும் புதிய அமைச்சர் டக்ளஸ்

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழ் தலைமைகள் என்று சொல்பவர்கள் சரியான முடிவுகள் எடுப்பதில்லை என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு இன்று இரவு வருகை தந்து ஆலயத்தை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனக்கு கொடுத்த வாய்ப்பை வவுனியா மக்களது பிரச்சினையை முன்னுரிமை கொடுத்து தீர்க்க பயன்படுத்துவேன்.

அத்துடன், புதிய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருக்கிறது. தேவைப்படும் இடத்தில் காட்டப்படும். எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதியின் சிம்மாசன உரையே இடம்பெறும். வாக்கெடுப்பு இடம்பெறாது எனத்தெரிவித்தார்.

இதன்போது புதிய அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தை எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

வழமை போல் தமிழ் மக்களது அவலங்களுக்கு எமது தமிழ் தலைமைகள் தான் காரணம் என்பதே எனது நிலைப்பாடு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடைய தலைமைகள் என்று சொல்லப்படுபவர்கள் சரியான முடிவுகள் எடுப்பதில்லை.

தமிழ் தலைமைகளுக்கு தோசையை எப்போது புரட்டிப் போடுவது என்று தெரியாது. இதனை விக்கினேஸ்வரன் அவர்களே சொல்லியிருக்கிறார். இதனை தனது அனுபவத்தின் ஊடாக சொன்னாரோ தெரியவில்லை. அவராலேயே புரட்டிப் போட முடியாமல் போயுள்ளது என்றார்.

Latest Offers