இன்றைய நெருக்கடி இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து! கடுமையான மோதல் ஏற்படலாம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று மாலைகொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சகல குழுக்களினதும் 'தார்மீக தலையீடு' ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்கு தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும், குழுக்களினாலும் மாத்திரம் தீர்வை கண்டுவிட முடியாது.

வண. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளை செய்யக் கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.

அதேபோன்ற அணுகுமுறையே இன்று முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகின்றது.

அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகின்றது.

இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் போய் முடியலாம். நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சை பரந்தளவிலான பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடும்.

சகலரும் ஒன்றிணைந்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவ வேண்டியது எமது பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்த நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்காகவும் போராடிய வண. மாதுளுவாவே சோபித தேரோ இன்று உயிருடன் இருந்திருந்தால், தான் ஆதரித்து பிரசாரம் செய்த பொது வேட்பாளரின் நடத்தையைக் கண்டு பெரும் விரக்தியடைந்திருப்பார்.

தனது ஆலோசகராக சிறிலால் லக்திலகவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த தினத்தில் அவரின் அநாகரிகமான நடத்தையின் முதல் அறிகுறிகளை சோபித தேரர் அவதானித்தார்.

என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சோபித தேரர் ஜனாதிபதியின் செயலை நன்றி கெட்ட வேலை என்று வர்ணித்தார்.

2015 ஜனவரிக்குப் பிறகு இந்த நன்றி கெட்ட குணத்தின் வெளிப்பாடுகளைப் பல தடவைகள் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. கடந்த மாதம் 26 ஜனாதிபதி செய்த காரியம் திடுதிப்பென நடந்தேறியதல்ல.

அது நன்கு திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டு வருவார் எனற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் தனக்கு வாக்களித்த சகலரினதும்அபிலாஷைகளுக்கு முரணாக அமைந்த இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை மைத்திரி மிகவும் ஆறுதலாக தயார் செய்தார் என்பதை இப்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

முன்னைய ஆட்சியுடன் தொடர்புடைய ஊழல்காரர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முயற்சித்தபோது அதற்கு குறுக்கே நின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என தெரிவித்துள்ளார்.

Latest Offers