சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்! கட்சியின் நிலைப்பாடு வெளிவந்தது

Report Print Shalini in அரசியல்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தமை தொடர்பில் நேற்று யாழில் கேள்வி கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்சியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென சிவசேனை தலைவர் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவருடைய கோரிக்கையை கட்சி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாது.

அவர் ஏற்கனவே கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கின்றார். சிவசேனைக்கும் இதுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கத் தேவையில்லை.

இதே வேளை இது ஜனாதிபதிக்கு எதிராகச் சொன்ன கருத்து. அவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவர் கூட இது குறித்து பெரிதாக எதனையும் கூறவில்லை.

ஆனால் இந்த விடயத்தை பூதாகரமாக்கி அவரை நீக்க வேண்டும், வழக்கு போட வேண்டுமென்று சொல்லும் அளவிற்கு சுமந்திரன் அப்படியான ஒரு பிழையும் செய்யவில்லை.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் சுமந்திரனுக்கு ஆதங்கம் இருப்பது இயற்கையானது.

சுமந்திரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு மாற்றத்திலும் ஈடு வைத்தவர். ஏனெனில் இது நடைபெறாவிட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்வேன் என்று கூட சொல்லியிருக்கின்றார்.

அதை ஏழாம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட இருந்த நிலையில் அதனைக் குழப்புகின்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளப்படாத விடயம் தான். ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடு உணர்ச்சி வசப்படக் கூடிய விடயம் தான். இதை பெரிது படுத்த தேவையில்லை என சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Latest Offers