கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை, என்னை விலக்கவுமில்லை: தவராசா

Report Print Rakesh in அரசியல்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை, என்னைக் கட்சி விலக்கவும் இல்லை என வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கும் நீங்கள் மீண்டும் அந்த கட்சியில் இணைந்து செயற்பட உள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் நேற்று அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்திருந்தேன். அவ்வாறு அந்தக் கட்சி உறுப்பினராக செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கட்சி செயற்பாடுகளில் முன்பு போன்று கூடுதலாக செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

அதற்காக நான் கட்சியிலிருந்து விலகினதாகவோ அல்லது கட்சி என்னை விலக்கியதாகவோ இல்லை. முன்பு போன்று செயற்படவில்லை அவ்வளவு தான். ஆகக் கட்சி செயற்பாடுகளில் தொடர்ந்து செயற்பட ஆர்வம் இல்லாத நிலையிலேயே அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தேன்.

ஆனால், நேற்று கட்சியின் செயலாளர் நாயகம் மீள்குடியேற்ற, இந்து கலாச்சார, வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்துள்ள நிலையில் வட மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு எனது பங்களிப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளை செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய எனது முடிவுகள் அமையலாம். ஆகவே ஜனாதிபதியின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் ஒன்றாகக் கலந்து கொண்டமையால் மீண்டும் இணைந்து விட்டோம் என்று செய்திகள் வந்திருக்கலாம்.

அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. இருவருக்கும் அந்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது. அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers