உள்விவகாரத்தில் தலையீடு செய்வது கீழ்த்தரமான வேலை: ஐரோப்பிய ஒன்றியத்தை சாடும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புக்கு அமைய இலங்கை சம்பந்தமான விடயங்களில் தலையிட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முடியாது என அமைச்சரவை இணை ஊடக பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த அறிக்கையில் கூறியிருந்தமை சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நேரடியாகவோ வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செயற்பட முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரைபடி செயற்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கு தெரிந்தவரை அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படி எதுவும் இல்லை. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் எங்கோ இருக்கும் ஒரு குழு தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வது கவலைக்குரியது.

ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம போன்ற அணியினரே இந்த அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளனர். இது குறித்து கவலையடைகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியம் தனது உள்விவகாரங்களை கவனிக்காது வேறு ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது மிகவும் மோசமான மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கை. இதனை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே நாடாளுமன்றம் செயற்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எவரோ ஒருவர் கூறுவது போல் இலங்கை செயற்படாது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers