யாழ். வந்த அமைச்சர் டக்ளஸ் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாணத்தில் வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியலை சகல பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் காட்சிப்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் இன்று யாழ்.வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அங் கு உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

மூன்றரை வருடங்களாக வீட்டுத் திட்டம் தொடர்பாக ஒன்றுமே நடக்கவில்லை. இழுபறிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

எங்களுடைய மக்களுடைய அவலங்களுக்கு அதிகளவான மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமைகளே காரணம். இதனை எனது அனுபவத்தின் ஊடாக நான் சொல்கிறேன்.

மற்றபடி காழ்ப்புணர்வினால் நான் கூறவில்லை. அரசாங்கத்தின் ஊடாக கடந்த மூன்றரை வருடங்களில் பல விடயங்களை செய்திருக்கலாம்.

அதேபோல் வடமாகாண சபை ஊடாக கடந்த 5 வருடங்களில் பல விடயங்களை செய்திருக்கலாம். ஆனால் ஒன்றையும் செய்யவில்லை. இன்று அதனை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

அது தமக்குள் உள்ள முரண்பாடுகளாலா? அல்லது யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதாலா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மிக நீண்டகாலத்தை வீணடித்துள்ளார்கள்.

மேலும் மூன்றரை வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட வீட்டு திட்டத்தினை நாங்கள் மீள ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான நிதி மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஓரளவு க்கு பூர்த்தியாக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் பயனாளிகளே தற்போது தேவையாக உள்ளார்கள். ஏற்கனவே செய்யப்பட்ட பயனாளிகள் தெரிவில் குறைபாடுகள் உள்ளதா? மாற்று அபிப்பிராயங்கள் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அரசியலுக்கு அப்பால் நியாயத்தின் அடிப்படையில் அதனை செய்யவேண்டும்.

ஆகவே வீட்டுத் திட்ட பயனாளிகளின் பெயர் பட்டியலை பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமசேவகர் பிரிவுகளில் காட்சிப்படுத்துங்கள்.

அதேபோல் வடக்கிழக்கு மாகாணங்களில் ஒரு லட்சம் வீடுகள் தேவையாக உள்ளன என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூறியுள்ளோம்.

ஆகவே வீடுகள் மேலதிகமாக தேவையா? இல்லையா? என்பது தொடர்பாகவும் மீளாய்வு செய்யவுள்ளோம் என்றார்.

Latest Offers