இலங்கையின் பின்புலத்தில் உள்ள இரு நாடுகள்! எவ்வாறான ஆபத்து ஏற்படும்?

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனநாயக படுகொலைகளை சிறிய நாடான இலங்கை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கொரு பின்புலம் இருக்கக்கூடும் என்கின்ற ஐயம் எழுகிறது என தமிழகத்தின் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிடுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சீனாவை காட்டி இலங்கைக்கு இந்தியா உதவுகின்றது. இந்தியாவை காட்டி சீனா உதவுகிறது. எனவே இரண்டு நாடுகளும் பகை நாடுகள், முரண் நாடுகள் என்று சொன்னாலும் இலங்கை அரசினுடைய, அரசமைப்பிற்கு முரணான செயற்பாடுகளுக்கும் இரண்டு நாடுகளுமே உதவுகின்றன.

எனவே தான் தி.மு.கழகத்தின் தலைவர் தளபதி, உடனடியாக மத்திய அரசு இந்த விடயத்தை கண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. ராஜபக்சவுக்கு பின்னால் சீனா இருக்கிறது என்பது தெளிவான உண்மை.

அம்பாந்தோட்டையை ராஜபக்ச காலத்தில் தான் சீனாவிற்கு கொடுத்தார்கள். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் ராஜபக்சவை ஆதரிக்க முடியாது என சொன்னதற்கு பின்னர் தான் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

எனவே இதனை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். இந்த ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை கண்டிக்காமல் விட்டால் அது வெறும் உள்நாட்டு பிரச்சினை என்று சொன்னால் பிறகு ஐக்கிய நாடுகள் மன்றம் என்ற ஒன்று தேவையில்லை.

மேலும், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழர்களின் நிம்மதியான வாழ்வில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும். ஐக்கிய நாடுகள் அவை மீதான மதிப்பையும் பின்னடைவிற்கு உள்ளாக்கும்.

ஏனெனில் எது வேண்டுமானாலும் ஒரு அரசு செய்து கொண்டிருக்கலாம் என்று சொன்னால் அங்கு ஒரு புறம்பான நிலை போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு இனப் படுகொலை செய்த கொலைகாரனாக ராபக்சவை உலகமெங்கும் பார்த்துக் கொண்டு இருக்கின்ற நிலையில் மறுபடியும் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் முயற்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதனை அனுமதிப்பது யாருக்கும் நல்லதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மீண்டும் ராஜபக்சவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டால் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறான ஆபத்து ஏற்படும்? என்ற கேள்விக்கு வீரபாண்டியன் பதிலளிக்கையில்,

அங்கே இருக்கின்ற எல்லோருமே ஏறத்தாழ தமிழர்களுக்கு எதிரானவர்கள் தான். ரணில் விக்ரமசிங்க தான் இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் உலக நாடுகள் முழுவதற்கும் சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்கியவர்.

இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சவின் அமைச்சரவையில் இராணுவ அமைச்சராக இருந்தவர். எனவே இவர்கள் எல்லோருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

ஆனாலும் கூட ஒட்டு மொத்தமாக ராஜபக்சவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பிறகு மைத்திரிபால சிறிசேன ஓர் அளவிற்கு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தார்.

மீண்டும் ராஜபக்சவின் கை ஓங்குமானால் தமிழர்களின் நிலை தாழும். தமிழர்களின் வாழ்க்கைக்கு எந்தவொரு உறுதியும் இல்லாது போகும்.

அவர்கள் உயிர் வாழ்வதும், அவர்களது பண்பாடும் சிதைக்கப்படும். எனவே மிகுந்த கவலைக்குரியதாகவே நாம் இதனை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers