முன்கூட்டி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது: ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நேற்றைய தினம் இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கேள்வி: மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதனை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோருகின்றனர்?

பதில்: சிரித்துக்கொண்டே... ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளது அதைப் பற்றி நாம் ஏன் இப்போது பேச வேண்டும். அந்தக் காலம் வரும்போது அதனைப் பற்றி பார்ப்போம். நாம் இன்று இப்போது இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உண்டு.

கேள்வி: அடுத்த ஜனாதிபதி தேர்தலை நீங்களே மீளவும் போட்டியிடுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தரப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டே நீங்கள் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கியதாக ஜே.வி.பி குற்றம் சுமத்துகின்றது.

பதில்: அது எல்லாம் நாடாளுமன்றில் தங்களது கருத்துக்கள். அது ஒவ்வொருவரினதும் கருத்தாகும்

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிடும் திட்டம் உண்டா? எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்க முடியும்?

பதில்: இன்னும் ஓராண்டு காலம் இருக்கின்ற பிரச்சினை குறித்து நாம் இப்போது பேச வேண்டியதில்லை. நாம் இன்று நாடாளுமன்றில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம்.

கேள்வி : உங்களுக்கு, இரண்டு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானிக்க முடியும்?

பதில்: இல்லை எனக்கு அவ்வாறு தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை, அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் நடத்தும் யோசனை எதுவும் எனக்குக் கிடையாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டாவது தவணைக்காக போட்டியிடப் போவதில்லை எனவும், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers