அரசியல் அதிகாரத்தைப் பெற்று சமூகத்திற்கு முடிந்ததைச் செய்தாக வேண்டும்!

Report Print Rusath in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ எது நடந்தாலும் அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்று உரிய இடத்தில் ஆளுமை செலுத்தி சமூகத்திற்கு முடிந்ததைச் செய்தாக வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் கள நிலவரங்கள் சம்பந்தமாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவரது நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

தற்போதைய அரசியல் இழுபறி தொங்கு நிலைமை சடுதியாகத் தோன்றிய ஒன்றல்ல. அது கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக உள்புகையாக இருந்து கடந்த மாதம்தான் தீப்பிழம்பாக வெளித்தள்ளியது.

அந்த வகையில் தான் இந்த அரசியல் சூறாவளி வீசத் தொடங்கி இன்னும் முடிவுறாத ஒன்றாகத் தொடர்கின்றது. இந்த அரசியல் இழுபறிகளுக்குள் முஸ்லிம் சமூகம் மூக்கை நுளைத்தக் கொண்டு தடுமாற வேண்டியதில்லை.

எந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பேரினவாத சிந்தனையின் மைய நீரோட்டத்திலிருந்தே தோற்றம் பெற்றவர்கள் என்பதை மறந்து விட்டு செங்கம்பள விரிப்பை போட்டு உச்சக்களிப்பில் மிதக்க முடியாது.

ஏனெனில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைவரது செயற்பாடுகளும் ஏதோ ஒருவகையில் இனவாத மையக் கருத்தின் வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளதை இப்பொழுதும் காண்கின்றோம். இதற்கு முன்னரும் கண்டுள்ளோம்.

எனவே, உள்ளவற்றில் சிறிதளவாவது நல்லது உள்ள பக்கம் சமயோசிதமாக காய் நகர்த்தி நமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் பற்றிச் சிந்திப்பதே தற்போதைய கால கட்டத்தில் அறிவுடமையாகும்.

இலங்கைச் சமூகம் எதிர்நோக்கியுள்ள சீரழிவுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பட்டறிவுப் பலத்தோடு கூடிய அரசியல் அதிகாரமும் சாணக்கியமும் தேவை. அந்த அதிகாரத்தைப் பெற்று உரிய இடத்தில் ஆளுமை செலுத்தி சமூகத்திற்கு முடிந்ததைச் செய்தாக வேண்டும்.

Latest Offers