இலங்கையின் புதிய அரசுக்கு இப்படி ஒரு நெருக்கடியா? கனடாவில் வெடித்தது சர்ச்சை

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடாவின் Magnitsky Sanction சட்டத்தை உடனடியாகப் பிரயோகிக்குமாறு கனடாவின் எதிர்க்கட்சி வெளிவிவகார அமைச்சின் நிழல் உதவி அமைச்சர் Garnett Genuis விடுத்திருக்கும் வேண்டுகோள் இலங்கையிலும், கனடாவிலும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Garnett Genuis நேர்காணல் ஒன்றில் குறித்த விடயத்தைத் தெரிவித்திருந்தார்,

அந்த நேர்காணலில், குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் கனடாவிலிருந்து வெளியிடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

Magnitsky Sanction என்றழைக்கப்படும் தடைச் சட்டம், கனடாவின் எதிர்க் கட்சியான கொன்சவேடிவ் கட்சியினரால் முன்மொழியப்பட்டு, இன்றைய கனடா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

உலகின் எப்பாகத்திலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இனம் கண்டு, அவர்கள் மீது தனிப்பட்ட வகையில் குறிவைத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இச் சட்டம் வழி செய்கிறது.

மனித உரிமை மீறல்கள், ஊழல் குற்றங்கள் என்பவற்றில் சம்பந்தப்பட்ட எவராயினும் இச்சட்டத்தின்கீழ் கனடாவில் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவர்.

அவர்களது சொத்துக்கள் கனடாவில் இருக்குமாயின் அவை பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு கனடாவிற்கு பயணம் செய்யும் உரிமை மறுக்கப்படும். அதன் மூலம் அவர்கள் தம் சொந்த நாட்டில் முடங்க நிர்ப்பந்திக்கப்படுவர்.

இந்த சட்டம் முதலில் கனடாவின் செனட் சபையில் கொன்ஸவேடிவ் செனட்டர்களால் முன்மொழியப்பட்டு செனட் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்பின் கனடா நாடாளுமன்றத்தில் Bill S-226 - Magnitsky Sanction என்ற‌ பெயரில் கனடாவின் தற்போதைய லிபரல் அரசாங்கத்தினால் சற்றுத் தயக்கத்தின் பின்னர் சட்டமாக்கப்பட்டது.

உண்மையில் இதற்கான முன்மாதிரிச் சட்டம் 2012ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பபட்டிருந்தது. ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டு 2009ம் ஆண்டு இறந்த Sergei Magnitsky என்ற சட்டத்தரணியின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர்களது சொத்துக்களை அமெரிக்காவில் பறிமுதல் செய்வதற்காக இச்சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டம் ஒரு கருவியாகும். மனித உரிமைகளை கொடூரமாக மீறியவர்களுக்கு எதிராக இந்தக் கருவியை கனடாவின் தற்போதைய அரசாங்கம் பிரயோகிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்து கொண்டிருந்த காலத்தில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அது அமைய வேண்டும். கனடா மட்டுமல்ல, கனடாவின் நட்பு நாடுகளையும் இந்த நடவடிக்கையில் இணைக்க முடியும் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் Garnett Genuis.

இலங்கையில், நடக்கும் மனித உரிமை மீறல்கள் உட்பட பல விடயங்களை தற்போதைய கனடா அரசாங்கம் அதிகமாகக் கவனத்தில் கொள்வதில்லையே என Garnett Genuis இடம் நேர்காணலை செய்த ராகவன் பரஞ்சோதி வினவியபோது அதை Garnett Genuis ஏற்றுக் கொண்டார்.

கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுப்போம் என சொல்லியிருந்தாலும் தற்போதைய அரசாங்கம் அதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை... இது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பொது விடயம் என Garnett Genuis தெரிவித்திருந்தார்.

கனடாவின் எதிர்க்கட்சியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், கனடா ஆளும் கட்சியால் நிறைவேற்றப்பட்டதுமான Magnitsky Sanction சட்டம் குறிப்பிட்ட சில நாடுகளிற்கு எதிராக ஏற்கனவே பாய்ந்திருக்கிறது.

சவூதி அரேபியா உட்பட வேறு சில நாடுகளுக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் நிலைமையிலும் இருக்கிறது. அதேபோல இச்சட்டம் தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையை செய்தவர்கள்மீது பாயும் நிலைமை ஏற்பட வேண்டும் என்ற Garnett Genuis அவர்களின் வேண்டுகோள் தற்போது மற்றவர்களாலும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

இதற்கு தமிழ்க் கனடியர்களும், தமிழ் கனடிய அமைப்புக்களும் ஆதரவு தந்து இன்றைய கனடிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் அதிகமாக வதியும் ரொரன்டோ பெரும்பாகத்தை பிரதிநித்தியப்படுத்தும் லிபரல் அரச பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் நிகழ்வுகளுக்கு அழைத்து மாலை அணிவித்து அழகு பார்ப்பதற்கு முன்னர் அவர்களின் நிலைப்பாட்டை அறிவது முக்கியம்.

கனடாவிலும் அமெரிக்காவிலும் இந்தச் சட்டம் அமுலில் இருப்பதால் இலங்கையில் மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் இதன் மூலம் வட அமெரிக்காவில் கடும் சிக்கல்களை எதிர் நோக்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.