மைத்திரி - மகிந்தவின் பயணத்திற்கு முடிவு கட்ட வேண்டும்! ரணில் விடுத்துள்ள அறைகூவல்

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்படும் மைத்திரி, மகிந்த கூட்டணியின் பயணத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்துக்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில், ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பாதுகாப்பதற்காக கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பலதரப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறு நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளே இருக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வாக்களிப்புமூலம் அவர்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கின்றது.

முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், கட்சி தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், மக்கள் ஆணைக்கு முரணான வகையில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையினால், அரசியல் அமைப்பை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers