மாவீரர் நாள் நிகழ்வில் குழப்பம் விளைவிக்கும் தீய சக்திகள்

Report Print Dias Dias in அரசியல்

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பிரதேச இளைஞர்களாலும் மக்களாலும் இடம்பெற்ற பணியினை இலங்கை இராணுவத்தின் கைக்கூலிகளும், இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் நேரடியாகவும் தொலைபேசி அழைப்பு மூலமாகவும் மிரட்டி முடக்க முயன்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலும், துயிலுமில்லத்தில் பணியினை மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படங்களை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கி நேரடியாக அவர்களால் மாவீரர் நாளுக்காக வேலை செய்த இளைஞர்களும் மக்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை மாலை நினைவுக்கற்கள் என்று மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் சுமார் 20 கற்களையும் வாகரை துயிலும் இல்லத்தில் சுமார் 100 கற்களையும் இறக்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மட்டக்களப்பு மக்களால் நன்கு அரியப்படும் அரசியல் பிரபலம் ஒருவரும் இராணுவக் கைக்கூலிகள் எனப்படும் இருவர் மற்றும் தேசியக் கட்சி ஒன்றின் கல்குடா இணைப்பாளர் ஆகியோராலும் இந்த நினைவுக்கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனைப் போன்றே மட்டக்களப்பு, வாகரையிலும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அங்கு மக்கள் எதிர்ப்பு காட்டியதனைத் தொடர்ந்து அந்த பிரதேச கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் சிலருக்கு தலா 5,000 ரூபாவரை குறித்த கல்குடா தொகுதி இணைப்பாளர் மூலம் வழங்கப்பட்டு மக்களை சமாளிப்பதற்காக இவர்கள் பணத்தினைப் பெற்று வாகரைத் துயிலும் இல்லத்திலும் நினைவுக்கல் நேற்றையதினம் நடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து மாவீரர் நாள் பணியினை பிரதேச மக்களும் இளைஞர்களும் தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த கொக்கட்டிச்சோலைக்குப் பிராந்திய பொறுப்பதிகாரியும் மற்றும் சில பொலிஸாரும் இராணுவத்தினரும் பணி செய்து கொண்டிருந்த இளைஞர்களிடமும் மக்களிடமும் உடனடியாக துயிலும் இல்லத்தை விட்டு வெளியேறுமாறும் மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் அமைந்துள்ள இடம் அரச காணி எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதில் இராணுவப் புலனாய்வாளர்களின் கைக்கூலிகளால் நடப்பட்டுள்ள நினைவுக்கற்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் மாவீரர் நாள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

அதன் பின்னர் பிரதேச இளைஞர்களும் மக்களும் பொலிசாருடன் கலந்துரையாடி தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த உதவி புரியுமாறு கெஞ்சி கேட்டுள்ளனர்.

இந்நிலையில், நடப்பட்ட நினைவு கற்கள் அனைத்தும் உடனே அகற்றப்பட்ட வேண்டும் மற்றும் தடைசெய்யப்பட்ட சின்னங்கள் பயன்படுத்த கூடாது எனும் உத்தரவினை விடுத்தனர்.

அதன் பின்னர் மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தின் செயற்பாடுகள் தற்போது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதே போன்று வாகரையில் வேலை செய்த மக்களையும் இளையோர்களையும் பொலிஸார் தற்போது அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers