மகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட பிரதான காரணகர்தா பிரதமர் பதவியை பிக்பொக்கட் அடித்த மகிந்த ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாக சட்டவிரோத பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு பிறகே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை மாற்ற வேண்டுமாயின் சட்டரீதியான பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். போலி பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும். அத்தோடு ஜனாதிபதி அரசியலமைப்பையும் சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும்.

ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை பிரதமரை நியமிக்க அழைக்கின்றார். அப்படியானால், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு என்ன நடக்கும். மகிந்த ராஜபக்ச நீக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதியே ஒப்புக்கொண்டுள்ளார் என எண்ணுகிறேன். மகிந்த ராஜபக்ச பிரதமரா இல்லையா என்பதை அவரே கூற வேண்டும்.

மகிந்த ராஜபக்சவை நாட்டை மீட்டெடுத்த வீரன் என்றுதானே கூறுகின்றனர். அதனால், அவர் தனது மரியாதை பாதுகாத்துக்கொண்டு, தொடர்ந்தும் நாட்டில் அவமரியாதைக்கு உட்படாது, அதிகாரம் இருக்கும் அணியின் பிரதமரை நியமிக்க இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் கருணாரத்ன இதன் போது தெரிவித்திருந்தார்.