எழு நீ நிகழ்விற்கு விக்னேஸ்வரனை அழைப்பதால் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானம்

Report Print Theesan in அரசியல்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை சரியான முறையில் கையாண்டு, முடிவுகளை செயற்படுத்த தவறியமையினால் வரவேண்டிய ஒரு கோடி ரூபாவை நகரசபை இழந்துள்ளது. எனவே இவற்றுக்கு காரணமான வடமாகாண முன்னாள் முதலமைச்சரை அழைத்து எழு நீ நிகழ்வை எவ்வாறு நடத்துவது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செந்தில் ரூபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் 8ஆவது சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்குறித்தவாறு கேள்வி எழுப்பியதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்நிகழ்வை புறக்கணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த இழப்பீடு காரணமாக பலநூறு பேருக்கு வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டும், வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதாகவும், செந்தில் ரூபன் தெரிவித்திருந்தார்.முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் செயலாளராக செயற்பட்டு வருகின்றார். சபை உறுப்பினர்களை விட தலைவரின் தன்னிச்சையான முடிவால் 13 பேர் வெளியில் இருந்து குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது விபரங்கள் சபையில் முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டங்களிற்கு சரியான முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

நகரசபையின் பெயரை பயன்படுத்தி நிகழ்விற்கான நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற கட்சிகளிற்கு ஆலோசனைக் குழுவில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை முதன்மை விருந்தினராக கொண்டு வந்திருப்பது, அரசியல் நோக்கத்துடனேயே என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம். எனவே அரசியல் நோக்கமுள்ள சட்டரீதியற்ற நிகழ்வை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.

இந்நிலையில் அவரை அழைப்பது அரசியல் சார்ந்ததாகவே காணப்படுகின்றது, வவுனியாவிலுள்ள பல அரசியல் கட்சி சாராதவர்களின் பெயர்களை பரிந்துரைத்திருந்தோம் ஆனால் அவர்களில் எவரையும் பிரதம விருந்தினராக பெயர் குறிப்பிடவில்லை.

முன்னாள் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைப்பது தொடர்பாக சபையில் விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில் எவ்விதமான முன்மொழிவுகளையும் சபையில் பெறப்படாமல் அவரை அழைப்பதை நாம் எதிர்க்கின்றோம்.

எனவே அரசியல் சாராத ஒருவரை அழைத்து நிகழ்வை செயற்படுத்துவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நகரசபைத்தலைவர் கருத்து தெரிவிக்கும்போது,

எழு நீ நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கலாபூசனம் விருது பெற்றவர்களுக்கு நகரசபை விருது வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

ஏனென்றால் கலாபூசனம் விருது இலங்கையில் ஒரு சிறந்த விருது. நீண்ட நாட்களின் பின்னர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். ஆரம்பத்திலேயே இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையற்றது என்று தெரிவித்திருக்க வேண்டும்.

இன்னும் சில தினங்களில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தற்போது பிரதம விருந்தினரை மாற்றுவது என்பது சாத்தியமடையாத விடயமாகவே காணப்படுகின்றது. ஒருவரை அழைத்துவிட்டு தற்போது நீங்கள் வரவேண்டாம் என்று தெரிவிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Latest Offers