ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்:அனுரகுமார திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் எந்த நபருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை. ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.

விருப்பமோ விருப்பமில்லையோ அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் என்பது ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை பொதுவானது.

ஜனாதிபதியை அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வைக்க மக்கள் விடுதலை முன்னணி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சபாநாயகர் இந்த பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் என்று கூறினார். அப்படியான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற இந்த நிலைமை தானாக ஏற்படவில்லை. இது வேண்டும் என்றே செய்த சூழ்ச்சி. இதனால், ஜனாதிபதியே அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.

நாட்டில் தற்போது இரண்டு அரசாங்கங்கள் பதவியில் உள்ளன. இதனால், இரண்டு அரசாங்கங்களை பராமரிக்க பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

பிரதமரின் செலவுகளை இரத்துச் செய்ய ஐக்கிய தேசியக்கட்சி உண்மையில் யோசனையை கொண்டு வந்திருக்குமாயின் முதலில் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும். இரண்டு பிரதமர்களை பராமரிக்கும் நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அலரி மாளிகையின் சகல கட்டணங்களும் தனிப்பட்ட பணத்தை கொண்டு செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

Latest Offers