பிரதமர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்?

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவே, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் அரசியல் ஸ்தீரமற்ற நிலைத் தொடரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் கூடி அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தது.

இதன்போது, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்க முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் விடயத்தை, ஐ.தே.க உறுப்பினர்கள், ரணிலிடம் எடுத்துக்கூறியுள்ளதோடு, ரணிலை பிரதமர் பதிவிக்கு நியமிப்பதற்கான தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

நாட்டினுடைய அரசியலமைப்பு ஒரு நபரின் விருப்பம் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதாக அமையக்கூடாது என்பதையும், ஐ.தே.கவினர் ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை அந்தப் பதவியில் அமர்த்தியதை அடுத்து எழுந்து அரசியல் குழப்பம் தீர்வின்றி தொடர்கின்றது.

நாடாளுமன்றில் நவம்பர் 14 மற்றும் 16ஆம் திகதிகளில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் சட்டவிரோத அரசாங்கத்தின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டாம் என்று முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச பணியாளர்களை வலியுறுத்தி வருகின்றன.

எனினும் தாங்களே தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதாக கூறிவரும் மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சரவையும் தொடர்ந்தும் அரசாங்கமாக செயற்பட்டு வருவதுடன், பல்வேறு தீர்மானங்களையும் எடுத்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவே, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers