ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் - ஜோசப் ஸ்டாலின்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொலைகள் தொடர்பான ஆட்சியில் இருந்த அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்க, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகள் தொடர்பான 27 சம்பவங்களை நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால், கடந்த மூன்றரை வருடங்களில் அது சம்பந்தமான எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை, வழக்குகளை தொடரவில்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்கின்றன. ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலும் விசாரணைகள் நடத்தப்படாத நிலையில், தற்போதைய குழப்பான சூழ்நிலையிலும் இந்த விடயங்கள் தொடர்கின்றன.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவின் பாதுகாவலர் ஒருவர் நேற்று ஊடகங்கள் சம்பந்தமாக நடந்துக்கொண்ட விதத்தை நாம் பார்த்தோம்.

ரவிந்திர விஜேகுணரத்ன கடற்படை தளபதியாக இருக்கும் போது ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளரை கழுத்தை பிடித்து தாக்கியதை பார்த்தோம்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த சம்பவம் நடந்திருக்காது. தகவல் வழங்குவதை அடக்கும் நிலைமையே நாட்டில் காணப்படுகிறது.

ஜனாதிபதி 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததை பெரிதாக பேசினார். தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தகவல் வழங்க முயற்சிக்கும் போது அதனை தடுக்கின்றனர்.

இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடக்காது இருக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் ஜனநாயகம், ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்த போவதாக கூறியவர்களே அதற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்படுமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சிவராம், வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக கடந்த காலங்களில் விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த விசாரணைகள் முடக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers