மைத்திரியின் வெகு நாள் கனவு! அமோக வெற்றி

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலட்சக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வளம் சேர்க்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து விடப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஜரட்ட மக்களுக்காக கண்ட நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் அவரது முழுமையான கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துரித மகாவலி திட்டத்தின் இறுதி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் திறக்கப்பட்டன.

நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முதன்முறையாக வான் கதவு மட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்டார்.

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கமாகும் என்பதுடன், இது இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும்.

இதன் மங்கள நீரோட்ட நிகழ்வு கடந்த ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றதுடன், குறுகிய காலப்பகுதியில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முதன்முறையாக வான் கதவு மட்டத்தை அடைந்துள்ளமையினால் இதற்கு இயற்கையின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றுள்ளதென குறிப்பிட முடியும்.

இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு பராக்கிரம சமுத்திரத்தைப் போன்று சுமார் நான்கு மடங்காகும் என்பதுடன், இதன் மூலம் 82,000 ஏக்கர் வயற்காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சுமார் 2,000 சிறிய மற்றும் பெரிய குளங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளதுடன், வடமத்திய மாகாணத்தில் 1,600 குளங்களுக்கும் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் நீர் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் அம்மாகாணங்களின் 03 இலட்சம் ஏக்கர் காணிகளில் விளைச்சலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், 15 இலட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். மேலும் 03 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியும் வழங்கப்படவுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், நீர்த்தேக்கத்தின் மின் பிறப்பாக்கிகளினால் உற்பத்தி செய்யப்படும் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் வருடாந்தம் 336 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளை சேமிக்க முடியும். இந்நீர்த்தேக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பத்தி வருடாந்தம் 3,000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருடாந்த வருமானம் 225 மில்லியன் ரூபாவாகும்.

மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து களுகங்கை நீர்த்தேக்க வளாகத்திற்கும் சென்று அதன் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்த அடுத்த பாரிய நீர்த்தேக்கம் களுகங்கை நீர்த்தேக்கமாகும். மாத்தளை மாவட்டத்தின் தும்பர, பள்ளத்தாக்கின் நக்கிள்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள களுபஹன பிரதேசத்தில் ஆரம்பமாகும் களுகங்கை லக்கல, பல்லேகம பிரதேசங்களில் மறிக்கப்பட்டு களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுகிறது.

இதன் மொத்த கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டு 618 மீ்ற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையதாகும்.

இந்நீர்த்தேக்கத்திலும் நீர் நிரப்பும் பணிகள் கடந்த ஜூலை 23ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது இதன் நீர்மட்டம் துரிதமாக அதிகரித்து வருவதுடன், நிர்மாணப் பணிகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

திட்ட வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் நன்மைகளை துரிதமாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.

ஜயந்தி சிறிசேன, இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேரா, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க, மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் பணிப்பாளர் டி.பி.விஜேரத்ன உள்ளிட்ட மகாவலி அதிகார சபை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Latest Offers