வளர்முக நாடு ஒன்றில் உயிருடன் இருக்கும் பொட்டு அம்மான்! கருணா பரபரப்பு தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளபதி பொட்டு அம்மான் வெளிநாடு ஒன்றில் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

ஞாயிறு ரிவிர பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக கருணா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

விடுதலை புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருணா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் பொட்டு அம்மான், நல்லாட்சி அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை கண்காணித்ததாக தெரிவித்தார்.

விடுதலை புலிகளை அழிப்பதற்கு நானும் ஆதரவு வழங்கியுள்ளேன் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கருணா இருப்பதாக தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரால் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதும் இந்த விடயம் குறித்து உறுப்பினர்கள் கருணா மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மீது திசை திருப்ப கருணா முயற்சிப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இத்தாலியில் இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அண்மையில் டுவிட்டார் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.