மகிந்த மீது அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சுமத்த முயற்சிக்கும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தாமே தயாரித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் ஜனாதிபதி கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுமாறும், வாக்கெடுப்பை இலத்திரனியல் முறையில் நடத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசியல் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து, அதனை மகிந்த ராஜபக்ச மீது சுமத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கையளித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பந்திகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடியானது, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரை சூழவுள்ளவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று காரணம் காட்ட ஜனாதிபதி முயற்சிப்பதாக பேசப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக ஏற்கனவே இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலாவது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நீக்குமாறு ஜனாதிபதி, ஐக்கிய தேசிய முன்னணியிடம் கோரியிருந்தார்.

அதனை நீக்கிய பின்னரே இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

எனினும் இந்த இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சட்டவிரோதமானவை என தெரிவித்திருந்தனர்.