கூட்டமைப்புக்கு ஒதுக்கிய நேரத்தில் மகிந்தவுடன் இருந்த மைத்திரி!

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

நேற்றுமாலை 6 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், மாலை 7 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியையும் சந்திப்புக்கு அழைத்திருந்தார் மைத்திரி.

எனினும், நேற்றுமாலை 6 மணிக்கு கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த நேரத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

சுகததாச அரங்கில் நேற்றுமாலை, 7000 சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக இந்த நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்தனர்.

கூட்டமைப்பு, மற்றும் ஐதேமுவுடன் சந்திப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மகிந்த ராஜபக்சவுடன், மைத்திரி ஒன்றாக நிகழ்வில் பங்கேற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், குறித்த நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு மைத்திரிபால சிறிசேன வருகை தந்தார்.

இதனால், ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பு இரவு 8.30 மணிக்குப் பின்னரே இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபரின் இந்த தடுமாற்றத்தினால், அரசியல் வட்டாரங்களில் நேற்றிரவு பரபரப்புக் காணப்பட்டது.