நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலை! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை

Report Print Gokulan Gokulan in அரசியல்

வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஆயுத கலாச்சாரத்தால் எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுடன், அரசியல் ரீதியாக சகல தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசு விரைவில் முன்வைக்கும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனத்தீவு பிரதேசத்தில் இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களுக்கு பின்னர் மட்டு மாவட்டத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஒத்துழைப்பு வழங்குவதுமில்லை.

ஆயுத கலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அதனால் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல் நிலையும், யுத்த சூழ்நிலையுமே ஏற்படும்.

நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டது.

அரசையும், நாட்டையும், அரச வளங்களையும் பாதுகாத்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டு மக்களுக்கு சுபீட்சமான அரசொன்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தினாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டது.

அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் இந்த அரசியல் நிலை மாற்றமடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கட்டியெழுப்பக் கூடிய ஸ்தீரமான அரசை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும். நாட்டு மக்கள் அதற்கான ஒத்துழைப்பு எமக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்ற போது சகல இன மக்களும் சமதானமாக வாழக்கூடிய நிலை உருவாகும். 2009ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் சகல இன மக்களும் அமைதியான - சமாதானமான சூழலிலே வாழ்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வடகிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அவ்வாறான தீர்வொன்றை மிகவிரைவில் முன்வைத்து அத்தீர்வு சகல இன மக்களினதும் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக உள்ளார். அதற்கு நாங்கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.