மாவீரர்களுக்காக இரு பொலிஸார் கொல்லப்பட்டனரா? முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

Report Print Dias Dias in அரசியல்

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று முன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுணதீவு படுகொலை சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தியுள்ள வடக்கு கிழக்கில் வாழும் பல முன்னாள் போராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் கல்முனை பிரேதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ், தினேஸ், காலி உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நிரோஷன் இந்திக்க பிரசன்ன ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறே கொல்லப்பட்டனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பேரில் சீ.ஐ.டி யின் பணிப்பாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் படுகொலசெய்யப்பட்ட தினம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதிக்கு சென்றிருந்ததாக கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியொருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் என்ற முன்னாள் போராளி பொலிஸாரின் அழைப்பிற்கு அமைய கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்குசென்ற நிலையிலே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

குறித்த முன்னாள் போராளியிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட கணேஸ்தினேஸ் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரின் காதலியென கருதப்படும் யுவதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை காரணமாக அதற்கு பழிவாங்கும் நோக்குடன் குறித்த கொலை முன்னாள் போராளிகளால் செய்யப்பட்டுள்ளது என மகிந்தவிற்கு ஆதரவான சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், முன்னாள் போராளிகள் மீது திசை திருப்பப்பட்டுள்ள அரசாங்கத்தின் சந்தேக பார்வை குறித்து சர்வதேச நாடுகள் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு சென்றுள்ள முன்னாள் போராளியான கணேசன் பிரபாகரன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.