வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு அவசியம்

Report Print Sujitha Sri in அரசியல்

வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஆயுத கலாச்சாரத்தால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்பதுடன், அரசியல் ரீதியாக சகல தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசு விரைவில் முன்வைக்கும் என அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டது.

அரசையும், நாட்டையும், அரச வளங்களையும் பாதுகாத்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டு மக்களுக்கு சுபீட்சமான அரசொன்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டது.

அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன் இந்த அரசியல் நிலை மாற்றமடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கட்டியெழுப்ப கூடிய ஸ்தீரமான அரசை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும். நாட்டு மக்கள் அதற்கான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பை வழங்குகின்ற போது சகல இன மக்களும் சமதானமாக வாழக்கூடிய நிலை உருவாகும்.

2009ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சகல இன மக்களும் அமைதியான, சமாதானமான சூழலிலே வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலையில், சகல இன மக்களும் ஏற்று கொள்ள கூடிய வகையில் வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அவ்வாறான தீர்வொன்றை மிகவிரைவில் முன்வைத்து அந்த தீர்வு சகல இன மக்களினதும் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக உள்ளார்.

அதற்கு நாங்கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனை குழப்ப முற்படும் சக்திகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தில், வவுனத்தீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு அவர்களது ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஒரு திட்டமிட்டு ஒரு குழுவினர் இதனை செய்துள்ளதாக இராணுவ, பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் பொலிஸாரை படுகொலை செய்து அவர்களது ஆயுதங்களை எடுத்து சென்ற இவ்வாறான சம்பவம் 9 வருடங்களின் பின்னரே எமது மாவட்டத்தில் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (30) பிரதமர் தலைமையில் கூடி இது சம்பந்தமாக ஆராய்ந்தோம். பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்புக்கு உடனடியாக சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, ஒத்துழைப்பு வழங்குவதுமில்லை. ஆயுத கலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அதனால் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல் நிலையும், யுத்த சூழ்நிலையுமே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.