வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது! ஒரே இரவில் 16%ஆக மாற தயாரில்லை

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

ஒன்பது மாகாணங்களை எட்டு மாகாணங்களாக குறைக்க முடியாது என்பதுடன், வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்ற விடயத்தில் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று இரவு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினர்களும் தெளிவோடு இருக்கின்றோம்.

ஒன்பது மாகாணங்களை, எட்டு மாகாணங்களாக குறைக்க முடியாது. வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம்.

காரணம் இன்றைய நிதி ஒதுக்கீட்டு முறைகள், வேலை வாய்ப்புக்கள், அபிவிருத்தி விடயங்கள் அத்தனையும் பிரதேச ரீதியாக, தொகுதி ரீதியாக, மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

இரண்டு மாகாணங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை, வடகிழக்கு என இணைந்து குறைத்து கொள்வதற்கோ அல்லது எதிர்காலத்தில் எமது சமூகத்தின் உரிமைகளை விடுட்டு கொடுப்பதற்கோ நாங்கள் தயாரில்லை.

மட்டக்களப்பில் 27% ,திருகோணமலையில் 44% , அம்பாறையில் 43% இருக்கின்ற முஸ்லிம் சமுகம், வடகிழக்காக மாறி ஒரே இரவில் 16%ஆக மாறுவதற்கு தயாரில்லை.

அந்த அடிப்படையிலே நாங்களும் எங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரோடு பேசி இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.