மகிந்தவை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட மைத்திரி - பேசியது என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை இன்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு எந்த வகையிலும் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் தான் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் எந்த சந்தேகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் தான் எந்த வகையிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளா்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக சேவா லங்க நிறுவனத்தின் தலைவர் ஹர்ச குமார நவரத்ன ஜனாதிபதிக்கு அறிவித்ததை அடுத்தே ஜனாதிபதி, மகிந்தவிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கும் திட்டத்தில், அரசசார்பற்ற அமைப்பான சேவா லங்கா நிறுவனத்தின் தலைவர் ஹர்ச குமார நவரத்ன முக்கிய பங்காற்றிய நபர் எனக் கூறப்படுகிறது.

அதேவேளை பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் சிலர், மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, நாமல், யோசித்த ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது எந்த வகையிலும் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.