மஹிந்த, நாமலுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச புதிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர், கடந்த மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டனர்.

எனினும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இராஜினாமா செய்து கொள்ளாமல் வேறு கட்சியில் இணைந்துள்ளதாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹிந்த உள்ளிட்ட குழுவினர் இராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு நபருக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளில் உறுப்பினராக செயற்பட முடியாதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பிலான மனுக்களின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஆசனம் இல்லாமல் போய்விடும் என்பதனால் அந்தக் குழுவினர் நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் கட்சி மாறியதாக இதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதனை இடை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.