புதிய அரசியலமைப்பை ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வருவது என்பது ஒரு ஏமாற்று வேலை!

Report Print Thileepan Thileepan in அரசியல்

சுதந்திர தினத்திற்கு முன்பாக ஒரு புதிய அரசியலமைப்பை ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வருவது என்பது ஒரு ஏமாற்று வேலையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சேமமடுவில் 1984ஆம் ஆண்டு 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 29 பேரின் 34ஆவது நினைவு தின விசேட வழிபாட்டிலும், சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நினைவஞ்சலி கூட்டத்திலும் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தில் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எங்களது கட்சி மத்திய குழு கூடி தீர்மானம் ஒன்று எடுத்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறுதி வழங்கியதாக கூறுகின்றனர்.

அதாவது சுதந்திர தினத்திற்கு முன்பாக புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதாகவும், அதற்கான ஆதரவை தாங்கள் தருவதாக கூறி 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற ஒருவரை பிரதமராகக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதியிடம் கடிதத்தை கையளித்துள்ளனர்.

எங்களைப் பொறுத்த வரை சுதந்திர தினத்திற்கு முன்பாக ஒரு புதிய அரசியலமைப்பு வருவது என்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

இச்செய்தியானது எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலிலே ஒரு பொய்யான பிரச்சாரத்திற்கு பயன்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.