மைத்திரியின் பரம எதிரியாக மாறினார் மகிந்த? அடுத்த தேர்தலில் மைத்திரி அதிரடி பிரவேசம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலுடன் களமிறங்கும் நோக்குடனேயே தனது பரம எதிரியாக கருதி வந்த ஒருவரை பிரதமராக்கி, அதன் மூலம் நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்கியுள்ளார் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமை ஒரு மாத காலமாகியும் இதுவரை சுமுகமான ஒரு நிலைக்குத் திரும்பாமை தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை உருவாகுவதற்கு காரணமான இந்த முடிவை மைத்திரியும் மகிந்தவும் எடுக்கின்ற வேளையில் ஏனைய கட்சிகளிலிருந்து சிலரை விலைக்கு வாங்கி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்றும் அதனூடாக தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் எண்ணியிருந்தார்கள்.

ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போன காரணத்தினால் நாடு இன்று மோசமான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.

ஒட்டுமொத்த சிங்கள மக்களுடைய வெறுப்பையும் சம்பாதிக்க கூடிய நிலைமைக்குள் நாடு உள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது, பொருளாதாரம் நலிவடைந்துள்ளது, பல மில்லியன் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குறுகிய அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மேற்படி நிலைமை என்பது ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்திருக்கின்றது.

ஒரு மாதத்துக்கும் மேலாக மோசமான நிலைமை நீடித்துக் கொண்டிருப்பதனால் இதிலிருந்து மீள்வதென்பது கடினமான ஒன்றாகவே தென்படுகின்றது.

அரசியல் சாசனத்தின் மேல் சத்தியப்பிரமாணம் எடுத்து அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்து வந்திருக்கக்கூடிய ஜனாதிபதியொருவர் அரசியல் சாசனத்திற்கு முரணாகவும் சட்டங்களுக்கு முரணான வகையிலும் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகின்ற அனைத்து சம்பவங்களுக்கும் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு மோசமான சூழல் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டிருக்கின்றது, எனவே காலம் தாழ்த்தாது ஜனாதிபதி ஒரு சட்டபூர்வமான முடிவை எடுத்து நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்கி அரசியல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.