மிகப் பெரிய தனி அரச கேள்விப் பத்திரக் கோரல்! மஹிந்த அரசின் அதிர்ச்சி நடவடிக்கை அம்பலம்

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் வரலாற்றில் சர்வதேச ரீதியில் மிகப் பெரிய தனி அரச கேள்விப் பத்திரக் கோரல் ஒன்றை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பதவியேற்ற கையோடு அவசர அவசரமாகக் கோரி விடயத்தை வேகமாக ஒப்பேற்றி முடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

சுமார் ஆயிரம் கோடி டொலர் (சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபா) பெறுமதியான கேள்விப் பத்திர விவகாரத்தையே அவசர அவசரமாக ஐந்தே ஐந்து வார காலத்துக்குள் ஒப்பேற்றி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

வாயு மீள்நிரப்பல் அலகும், மிதக்கும் சேமிப்புக் களஞ்சியமும் அடங்கிய ஒரு பாரிய கட்டுமானத் தொகுதியை அமைத்தல் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்துக்கான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கே இந்த கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டம் ஒன்றுக்கு பொறியியல் ரீதியான திட்டமிடல், மதிப்பீடு, நிதி மாதிரிக் கட்டமைப்பு ஆகியவற்றைத் தயாரித்து முடிக்கவே வழமையாக ஆறு முதல் எட்டு மாதங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் இந்தத் திட்டம் பற்றிய அறிவித்தலை ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி சரியாக 11 நாட்களில் (நவம்பர் 5 ஆம் திகதி) விளம்பரப்படுத்தகக் கோரி, சரியாக ஐந்து வார காலத்தில், டிசம்பர் 12ஆம் திகதி அதற்கான முடிவுத் திகதியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றமை குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் அதிர்ச்சி தெரிவித்திருக்கின்றன.

இலங்கையை பொறுத்த வரை இலங்கை அரசு சர்வதேச ரீதியில் கோரும் தனிக் கேள்விப் பத்திரக் கோரிக்கைகளில் ஆகக்கூடிய பெறுமதியுடையது இதுதான். இருபது வருட கால விநியோகத்துக்கான கேள்விப் பத்திரம் இது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மதிப்பீடு தயாரிப்பதற்கே ஆறு மாதம் முதல் எட்டு மாத காலம் எடுக்கும் ஒரு திட்டத்துக்கான கேள்விப் பத்திரத்தை ஐந்து வார காலத்துக்குள் சமர்ப்பிக்கக் கோருவதன் பின்னால் புதைந்து கிடக்கும் சூத்திரம் குறித்து பல தரப்புகளிலும் விசனமும் ஆச்சரியமும் தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அதுவும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வார காலத்துக்குள் இத்தனை பெரிய தொகைக்கான கேள்விப் பத்திர விளம்பரம் பிரசுரமானவை குறித்தும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிவிக்கப்படுகின்றது.