தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்கின்றன

Report Print Theesan in அரசியல்

சிவில் உடையில் வருகை தந்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, தம்பனைசோலையில் இன்று காலை நடைபெற்ற முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஒதியமலையில் படுகொலை செய்யபட்டவர்களிற்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது அங்கே இருந்த மக்களால் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கபட்டது. சிவில் உடையில் திரியும் இனம்தெரியாத சில நபர்கள் இரவு நேரங்களில் வயல் காவலுக்கு செல்லும் போது எம்மை வழிமறித்து நீண்டநேரம் இருத்தி வைக்கிறார்கள்.

சிலவேளைகளில் அதிகாலை 2 மணி வரைக்கும் இருத்தி வைக்கிறார்கள்.

இதனால், தாங்கள் பயிரிடப்பட்டவைகளை யானைகள் அழித்துவிட்டதாகவும் இதனை யார் தட்டி கேட்பதெனவும் தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரி இருந்தமையால் அவரது கவனத்திற்கு நாங்கள் குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்தோம்.

எனினும், இந்த ஒன்றரை மாதத்திற்கு பிற்பாடு பழைய குருடி கதவை திறவடி என்பது போல சிவில் உடையில் வருகை தந்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பல நடைபெற்றுவருகின்றன.

இது ஒரு ஆபத்தான விடயம் எனவே அனைத்து தமிழ் கட்சிகளும், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற தமிழ் கட்சிகளும் இவ் விடயத்தை கருத்தில் எடுத்து ஜனாதிபதி, பிரதமருக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

தற்போது விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பற்றி கூறிய கருத்தானது புனர்வாழ்வு பெற்ற 12,000 போராளிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கும் செயற்பாடு என்றே நான் பார்கிறேன்.

எனவே, போராளிகளை பலிகடாவாக மாற்றுவதை நாம் ஏற்கமுடியாது. அத்துடன் நாட்டை குட்டி சுவராக்கியது தமிழ் இளைஞர்களே என்று பெரும்பான்மையினத்தை சேர்ந்தோர் கூறுகிறார்கள்.

உண்மையில் எம்மீது திணிக்கப்பட்ட அரச பயங்கர வாதத்திற்கு எதிராகவே எமது இளைஞர்கள் போராடினார்கள் என்பதை அவர்களிற்கு கூறிக்கொள்கின்றேன்” என மேலும் கூறினார்.

Latest Offers