ரணிலை பிரதமாராக்குவதனைத் தவிர மாற்று வழி கிடையாது

Report Print Kamel Kamel in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதனைத் தவிர வேறு மாற்று வழிகள் ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் அமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதனைத் தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது.

ஜனாதிபதிக்கு பிடிக்குமா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை, அரசியல் அமைப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் யாருக்கு உண்டோ அவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட விரோதங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் நியமிக்கப்பட முடியாது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய நாடாளுமன்றம் எடுத்த தீர்மானங்கள் சரியானது என்பது புலனாகின்றது.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று நாட்டில் பிரதமர் எவரும் கிடையாது. தற்பொழுது நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒரே சமநிலையானவர்கள் அமைச்சர்களோ, பிரதமரோ கிடையாது.

இதேவேளை, நாம் இந்த அரசாங்கத்தை ஆறு தடவைகள் நாடாளுமன்றில் தோற்கடித்துள்ளோம், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியக் கடதாசி மூலமும் ரணிலுக்கான ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் என ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.